அமைப்புசாரா (கிக்) தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ராஜஸ்தான் அரசு ரூ. 200 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது, சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வரை கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்த முதல்வர் அது பழைய பட்ஜெட் என்பதை உணரவில்லை. அருகில் இருந்த அமைச்சர் சுட்டிக் காட்டியதையடுத்து பட்ஜெட் உரையை உடனடியாக நிறுத்தினார். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
30 நிமிடங்கள் வரை அவை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, மீண்டும் முதல்வர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், ரூ. 19 ஆயிரம் கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளார்.
அதில், விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாணவிகளுக்கு 30 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கிக் மற்றும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிக் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் ரூ. 200 கோடியில் கிக் தொழிலாளர்கள் நலன் மற்றும் மேம்பாட்டு நிதி அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவிலேயே கிக் தொழிலாளர்களுக்கு நல நிதியை அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது.
அதேபோல, முக்கியமந்திரி சிரஞ்சீவி ஷ்ரமிகா சம்பல் யோஜனா திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ் ஒரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 7 நாட்கள் வரை ஒரு நாளைக்கு ரூ. 200 நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா








