பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை, திருடர்களிடம் கொடுத்ததைவிட, நாட்டின் மீது அணுகுண்டு விழுந்திருக்கலாம் என்று கூறி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான், பாகிஸ்தானை தற்போது ஆட்சி செய்பவர்கள் மிக மோசமான திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என விமர்சித்தார்.
இவர்கள் நாட்டை ஆட்சி செய்வது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்ட இம்ரான் கான், இவர்களிடம் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டதைவிட, பாகிஸ்தான் மீது அணுகுண்டு விழுந்திருக்கலாம் என கூறினார்.
“என்னுடைய ஆட்சிக் காலத்தில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளதாகக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள், இவர்களின் கடந்த கால ஊழலுக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றபோது, ஆட்சி நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என தனக்கு அறிவுரை கூறியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சியாளர்கள் நாட்டின் நீதித்துறை உள்பட அனைத்து அமைப்புகளையும் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய இம்ரான் கான், இந்த திருடர்கள் மீது இனி எந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
தங்கள் கட்சி சார்பில், இஸ்லாமாபாத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்த இம்ரான் கான், அதனை தடுக்கும் சக்தி பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு கிடையாது என குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களை திருடர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் இம்ரான் கான் தொடர்ந்து கூறி வருவதற்கு, பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இம்ரான் கானின் இத்தகைய பேச்சுக்களால் நாடு பிளவுபட்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: