ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் அமைச்சராக இருந்த போது, மாற்றுத்திறனாளிகள் பள்ளி தொடங்குவதாக கூறி, அவரது கணவர் பாபு நடத்தி வந்த அறக்கட்டளைக்கு ரூ.15.45 லட்சம் ஒதுக்கி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு ஆகியோர் குற்றவாளிகள் என்றும், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கிருபாகரன் என்பவர் உயிரிழந்து விட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்திரகுமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.








