“நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” – வைகோ பதிவு!

“நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்ற வீடியோ பதிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில்…

“நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்ற வீடியோ பதிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 25ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அப்போது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் பின்னர், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மகன் துரை வைகோ,” சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – மே 31ம் தேதி நேரில் ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

இந்நிலையில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை பேசி வைகோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது :

“நான் ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாட்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன்.

இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்”

இவ்வாறு வீடியோ பதிவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.