14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் அவர்களுடன் தளபதி 67 படத்தில், இணைந்து பணியாற்றுவது குறித்து நடிகை த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் மிகவும் சந்தோசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் கதையும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணி இணைந்து பணியாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லோகேஷ் கமல் அவர்களை வைத்து விக்ரம் படத்தினை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். விஜயும் இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்தார். இருவருமே ஆளுக்கொரு பக்கமாக இயங்கி மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கும் நிலையில் தற்போது தளபதி 67 என்ற படத்தில் மீண்டும் கைகோர்த்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தளபதி 67 படம் குறித்து நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நாள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகும் கதாநாயகி யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்த நிலையில் இன்றைய முதல் அறிவிப்பாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 2k ஹிட்ஸ்களின் கனவுக்கன்னியாக, முன்னணி நடிகையாக தற்போதும் வளம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தளபதி 67 படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நீங்க கேட்ட அப்டேட் இதோ, 14 வருடங்களுக்கு பிறகு மிகவும் பரபரப்பான, சென்சேஷனல் ஜோடியாக நீங்கள் பார்த்து ரசித்த இவர்கள் மீண்டும் இந்த படத்துக்காக இணையவுள்ளனர் என்று குறிப்பிட்டு, இருவரும் இதுவரை இருவரும் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய 4 படங்களின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.
மேலும் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து நடிகை த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய விருப்பமானவர்கள், மிகத்திறமையான குழு பங்குபெற்றுள்ள இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 5-வது முறையாக திரையில் தோன்றவிருக்கும் விஜய்-திரிஷா ஜோடியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி , செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
🙏🏻🧿 pic.twitter.com/tG7AyqHzIT
— Trish (@trishtrashers) February 1, 2023
மேலும் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா











