சேலத்தில் சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனையை கையும் களவுமாக நியூஸ் 7 தமிழ் ஊடகம் பிடித்த நிலையில், இவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அலட்சியமாக காவல்துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் இது சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன. இதனையடுத்து அவ்வப்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனாலும் இந்த சீட்டு விற்பனை குறைந்தபாடில்லை. இவ்வாறான சூழலில் நியூஸ் 7 தமிழ் நேரடியான கள ஆய்வை சேலம் மாவட்டத்தில் நடத்தியது. இதில், சேலம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய லாட்டரி சீட்டுகள், அதை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் பல வீடியோவில் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வினை மேற்கொண்டனர். மேலோட்டமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவரை மட்டும் காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தியாளர் தொடர்ந்து கேள்வியெழுப்பினார். ஆனால் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து எப்படியாவது நழுவினால் போதும் என்கிற கதியில் உதவி காவல் ஆணையர் அசோக் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேபோல லாட்டரி விற்பனை செய்தவர்கள் எங்கே என நிருபரிடமே அவர் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து அவர் அங்கிருந்து நழுவி சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த அவர், காவலர்களோடு ஆய்வினை மேற்கொண்டார். ஆனால் அதற்குள் விற்பனை செய்தவர்கள் அந்த இடத்திலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று விட்டனர். எனவே மறு ஆய்வின்போது காவல்துறையினருக்கு எந்தவித ஆவணங்களும் கிடைக்கவில்லை.
எனவே இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உதவி ஆணையர் பதிலளித்து சென்றுவிட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாவண்யா உறுதியளித்துள்ளார்.










