தடகள போட்டியில் சாதிக்க துடிக்கும் மின்வாரிய ஊழியர் 50 வயதிலும் விடாமுயற்சியுடன் தேசிய அளவில் நடைபெறும் தடைகள போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார்.
சென்னை எர்ணாவூர் மின் வாரிய குடியிருப்பில் வசிப்பவர் தங்கதுரை (வயது 50). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மனைவி உள்ள நிலையில் இவர் மணலி துணை மின்நிலையத்தில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது இளம் வயதில் இருந்தே நடை ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வெள்ளி வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், மின்வாரியம் சார்பாக பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று மின் வாரியத் துறை சார்பாகவும், பாராட்டுகளை பெற்றதோடு பல மாநிலங்களுக்கு சென்று நடை ஓட்டம், மாரத்தான், சைக்கிள், நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சான்றிதழ் பதக்கங்களை கோப்பைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கொரியாவில் நடைபெற்ற நேஷனல் டிரய்லத்தான் சாம்பியன்ஷிப் சார்பில் நடத்தப்பட்ட 40 கிலோமீட்டர் சைக்கிள், 10 கிலோ மீட்டர் நடை போட்டி, 1.5 நீச்சல் உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு தனது தீவிர முயற்சியால் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். ஆல் இந்தியா எலக்ட்ரிசிட்டி ஸ்போர்ட்ஸ் கண்ட்ரோல் போர்டு நடத்திய
10 கிலோ மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும், 1500 கிலோமீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் தேர்வாகி உள்ள தங்கதுரை நடை மாரத்தான் போட்டியில் பங்கு பெறுவதற்காக தனது வீட்டிலும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரம் உதவியுடனும் சென்ட் தாமஸ் மவுண்ட் சாலை மற்றும் மெரினா பீச், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர நடை மாரத்தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உடற்பயிற்சி விளையாட்டுக்கு வயது வரம்பு கிடையாது. மின் வாரியத்தில் பணி புரிந்து தனது பணியையும் தாய் தந்தை உட்பட குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே விளையாட்டின் ஆர்வத்தினால் 30 ஆண்டு காலமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது உள்ள இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். இதனை தடுக்க இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக தடகள போட்டிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் வேண்டும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.








