சென்னை ஐஐடியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில், மாணவர் ஒருவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் ஆயிரத்து 430 பேருக்கும் பணி வாய்ப்பும் கிடைத்துள்ளது.
புற்றீசல்கள் போல் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் பெருகி விட்ட, பிறகு கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி நல்ல பணி வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் தான், மாணவர்கள், புகழ்வாய்ந்த கல்லூரிகளில் பயில அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் சென்னை ஐஐடியில் பொறியியல் படிக்க ஆறாம் வகுப்பிலிருந்தே நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை ஐஐடி தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முன்னணியில் உள்ளதே அதற்கு முக்கிய காரணமாகும். அண்மையில், சென்னை ஐஐடியில் நடந்த கேம்பஸ் தேர்வில் 380 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், 1,199 மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அத்துடன் 231 மாணவர்கள் பயிற்சி மூலம் வேலை வாய்ப்பை பெற்றனர்.மொத்தத்தில் 1,430 மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இந்த கேம்பஸ் தேர்வில் 14 சர்வதேச நிறுவனங்களில் பணியாற்ற 45 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதைத்தவிர 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 199 பேருக்கு வேலை கிடைத்துள்ளது, இந்த தேர்வில் கலந்து கொண்ட 61 எம்பிஏ மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வேலைக்குத் தேர்வான மாணவர்களின் சராசரி சம்பளம் ஆண்டுக்கு இருபத்தி ஒன்றரை லட்சம் ரூபாய். அதே சமயம் மாணவர் ஒருவர் சாதனை அளவாக ஒரு கோடியே, 98 லட்சம் ரூபாய்க்கான வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவர்களில் 80% பேர் வேலையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் தொழில் முனைவோர்களாகப் பயணிக்க உள்ளனர் என்பதும் முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் நடப்பாண்டில் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் ஒரு முறை சிகரம் தொட்டுள்ளனர் எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் சென்னை ஐஐடியின் வேலை வாய்ப்பு ஆலோசகர் சி எஸ் ஷங்கர் ராம். சர்வதேச வேலைவாய்ப்பைப் பெற்ற 45 பேரில் 11 பேர் ரகுடன் மொபைல் (Rakuten Mobile) நிறுவனத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.
மற்றவர்கள் க்ளீன், மைக்ரான் டெக்னாலஜிஸ், ஹோண்டா ஆராய்ச்சி வளர்ச்சி, அஜஞ்சர், ஊபர் போன்ற சர்வதேச நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வாகியுள்ளனர். மற்றொரு புதிய சாதனையாக 42 சதவீதத்தினர் பொறியியல் தொழில்நுட்ப துறைகளிலும், 17 சதவீதத்தினர் டேட்டா சயின்ஸ் அனால்டிக்கஸ் எனப்படும் தரவு அறிவியல் பகுப்பாய்வு துறையிலும், 17 சதவீதத்தினர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். 2018-19ஆம் ஆண்டிற்குப் பிறகு கொரோனா காலம் கடந்த பின் சென்னை ஐஐடி மீண்டும் ஒரு முறை சிகரம் தொட்டுள்ளது என்றால் மிகையில்லை
– ரா.தங்கபாண்டியன்.








