முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு நாங்கள் நேரம் கேட்டால் 2 நாட்கள் தாமதமாகும் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே கிடைக்கும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை, திவான் பாஷ்யம் தெருவில் புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டம் 2.35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திவான் பாஷ்யம் தோட்ட தெருவில் உள்ள கழிவுநீரை அகற்ற பல முயற்சி எடுத்தும் முடியாமல் இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று அமைச்சர் நேருவிடம் இந்த பகுதி பிரச்சனையை பார்க்கவேண்டும் என்று தெரிவித்தோம். உடனடியாக இங்கு மினி பம்பிங் ஸ்டேஷன் அமைக்க அமைச்சர் நேரு உத்தரவிட்ட உடன் இந்த திட்டம் நிறைவடைந்தது என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு உள்ள இந்த திட்டம் 6 மாத காலத்தில் நிறைவு செய்யப்படும் என்று இங்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.
மா.சுப்பிரமணியன் முதலமைச்சரிடம் நல்ல பெயரை பெற்று உள்ளார். நாங்கள் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு நேரம் கேட்டால், 2 நாட்கள் தாமதமாகும். ஆனால் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனடியாக கிடைக்கும். அந்த அளவிற்கு மா.சுப்பிரமணியன் முதலமைச்சரிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
90-களில் இதே தொகுதியில் தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பொழுது என் கழுத்தில் கத்தி வைத்த காட்சியை அப்பொழுது இருந்த சென்னை மாநகர கமிஷனர் விஜயகுமார் அதை கண்டும் காணாமல் சென்றார். ஆனால் தற்போது அதே இடத்தில் மா.சுப்பிரமணியன் வேலை செய்வது சந்தோஷமாக உள்ளது. கொரோனா காலத்தில் இவரது பணிகள் பாராட்டத்தக்கவை. இவரது பணிகளை பார்த்து நானும் எனது தொகுதியில் பணிகளை தீவிர படுத்த இருக்கிறேன் என கூறினார்.
– இரா.நம்பிராஜன்