“அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் தின விழா இன்று தொடங்கியது. ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் தின விழா இன்று தொடங்கியது.

‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த விழாவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இலங்கை,  மலேசியா,  ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர்,  துபாய்,  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர்,  அமைச்சர்கள், கவிஞர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  இங்கு 40-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவின் முதல் நாளான இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு தலைப்பின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழா பேருரை ஆற்றி, ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை துவக்கி வைத்து,  பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்க உள்ளார்.விழாவினை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் அயலக நலன் குறித்து பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  அயலக தமிழர்கள் மலேசியா,  சிங்கப்பூர்,  இலங்கை என பல நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.  சுமார் 58 நாடுகளில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர்.

முதலமைச்சர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர்.  135 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.  அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கி வருகிறோம். வெளிநாட்டு வேலை ஏற்பாடு மட்டுமல்ல அங்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவர்களை மீட்கும் பணியிலும் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

வெளிநாட்டில் உயிரிழக்கும் தமிழர்களின் உடலை 8 நாட்களில் கொண்டு வரும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  செய்தித்தாள்களில் தமிழர்கள் மாட்டிக்கொண்டனர் என்று தகவல் கிடைத்தால்,  உடனே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.  முன்பெல்லாம் இந்திய அரசை தொடர்பு கொண்டு,  பின்னர் நம்மை தொடர்பு கொள்வார்கள். ஆனால் இப்போது எந்த பிரச்னை என்றாலும் நம்மை நேரடியாக அணுகினால் போதும்”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.