ஆளுநரை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ச்சியாக ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடங்கி, தமிழ்நாடு, நீட் விலக்கு மசோதா மற்றும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல விவகாரங்களில் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நீடித்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் தெரிவித்ததாவது..
” தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப பெறவேண்டும் என்பது மட்டுமல்ல, ஆளுநர் தேவை இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு.
எங்களுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். ஒரு கூட்டணிக்கு தேவை ஒரு தலைவர் அல்ல, இலக்கு. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி, அரசியல் சாசனம் ஆகியவற்றுக்கு எதிரான பாஜகவை தோற்கடிப்போம் என்ற கொள்கை வகுத்து நாங்கள் செயல்படுகிறோம்.
ஆளுநரை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







