கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று தக்காளியின் மொத்த விலை கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில்லரை விலை 100 முதல் 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இந்நிலையில் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னை காசிமேடு மீன் சந்தையில் விடுமுறை நாள் என்றாலே கூட்டம் அலைமோதும். கடந்த ஒரு வாரமாக எதிர்பார்த்த அளவு பெரிய வகை மீன்கள் வரத்து இல்லை. இந்நிலையில் கடலுக்கு சென்ற 400க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கரை திரும்பின. அப்போது பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு அதிகமாக வந்திருந்தன.
ஆனால் மீன் அதிக விலைக்கு விற்பனை ஆனது. வஞ்சிரம், வவ்வால், பாறை உள்ளிட்ட மீன்கள் கிலோ 50 ரூபாய் முதல் 100 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. பெரிய வகை வஞ்சிரம் கிலோ 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விற்கப்பட்டது.இதேபோல் கோழி மற்றும் முட்டை விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் கோழி இறைச்சி கிலோ ரூ.220க்கு விற்கப்படுகிறது. முட்டை ரூ.6.50க்கு விற்பனையாகிறது. காய்கறிகளை தொடர்ந்து கோழி, மீன் உள்ளிட்ட விலையும் உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






