வார்த்தைகளை வாளாக வார்த்து, மொழியைத் தேனாக வடித்து, கவிதையால் எதிரிகளை வீழ்த்தி கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினம் இன்று.
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” எனப் பாடி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், 1891-ஆம் ஆண்டு இதே நாள் புதுச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கனக சுப்புரத்தினம். 18 வயதில், காரைக்காலைச் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி என கால ஓட்டத்தில் தமிழ் தாயின் கரம் பிடித்து கரை சேர்ந்தவர் கவிஞர் பாரதிதாசன்.
கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் போன்ற புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி எழுத்துலகை வலம் வந்தார்.
பாரதியார் மீது பற்றுகொண்டிருந்த கனகசுப்புரத்தினம், அவரை நேரில் சந்தித்து உரையாடி தனது மானசீக குருவாகவும் ஏற்றுகொண்டார். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். பாரதியிடம் இருந்த தேசிய பற்று பாரதிதாசனிடமும் தொற்றிக்கொண்டது. காங்கிரசால் ஈர்க்கப்பட்டு, கைத்தறித் துணிகளைத் வீதிவீதியாக விற்பனை செய்தார்.
பின்னர் தமிழ் இனம், மொழி, நாடு என்னும் மொழிவழியான தமிழ்த் தேசியப் பார்வை அவருக்கு சரியெனப்பட்டு பாரதி வழியிலிருந்து சற்று விலகி புதிய தடத்தில் செல்லத் துணிந்தார். இதற்குக் காரணம் பெரியாரின் சிந்தனைகள். 1928-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். திராவிட மேடைகளில் கவிஞரின் கவிதைகள் முரசென முழுங்கின. 1929ம் ஆண்டு ‘குடியரசு‘ ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதினார். குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார்.
தமிழ் சமூகத்தைப் பகுத்தறிவு வழி நடத்திடவும் தனித்தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாகப் பாரதிதாசன் கவிதைகள் இருந்தன. தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற படைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலை கூர்மைபடுத்தின. தமிழின விடுதலையோடு ஒடுக்கப்பட்ட சமூக விடுதலையையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையை பறைசாற்றினார்.
தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் வழி நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, காதலா? கடமையா? இளைஞர் இலக்கியம், இசையமுது போன்ற அரிய நூல்கள் கவிஞரின் படைப்பாக விளங்கின.
செட்டிநாட்டுத் தமிழறிஞர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடம் நிதி திரட்டி சென்னை சாந்தோம் சாலையில் ‘முத்தமிழ் மன்றம்’ நிறுவினார். 1946ம் ஆண்டு அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட ‘புரட்சிக் கவிஞர்’ என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார். அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார்.
1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார். பாண்டியன் பரிசு நூலை திரைப்படமாக்க முயன்றார் .பாரதியார் வாழ்க்கை வரலாற்றினைத் திரைப்படமாக்க எண்ணினார். அப்படத்தில் தாமே பாரதியாராகவும் நடிக்க இருந்தார். திரைப்படங்களை உருவாக்க ஓயாது உழைத்த கவிஞரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் இயற்கை எய்தினார். 1982-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது. இன்றும் தமிழ் சமூகத்தின் அடையாளமாக தன் படைப்புகளால் தமிழை தாங்கி நிற்கிறார் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








