அரசியலுக்கு வந்தால் சினிமாவுக்கு குட்பை…! விஜய் கொடுத்த அரசியல் அப்டேட்!

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, தனது கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர்…

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, தனது கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக அவர் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை இன்று சந்தித்தார். அவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, சேலம், கிருஷ்ணகிரி ஒசூர், விருதுநகர், சிவகங்கை, திருச்சி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 234 தொகுதிகளைச் சேர்ந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் என 300 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ”விஜய் அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும், அவர் கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என கூறினார். அவர் அரசியலுக்கு வருவதற்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் நாங்கள் செய்துவிட்டோம். அவர் கைகாட்டினால் அரசியலில் ஈடுபடுவதோடு அவரோடு தொடர்ந்து பயணிப்போம்” என கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.