எம்ஜிஆர் என்ற மகா நடிகரின் திரையுலக வரலாற்றில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்திற்கும் அதில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் என்ற பாடலுக்கும் என்றும் இடமுண்டு.. அழியாப் புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் தபி சாணக்கியா என்ற ஆந்திர இயக்குநர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகில் சாணக்கியா இயக்கிய தெலுங்கு படங்கள்தான் அதிகம். அவர் தமிழில் இயக்கிய படங்கள் மாபெரும் வெற்றி படங்கள் ஆகும்.
1956ல் ஜெமினிகணேசன் , அஞ்சலி தேவி நடித்த காலம் மாறிப்போச்சு திரைப்படம் சாணக்கியா இயக்கத்தில் வெளியானது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான வகிதா ரஹ்மான் “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே” என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். தொடர்ந்து ஜெமினிகணேசன், சாவித்திரி இணையில் புதிய பாதை என்ற திரைப்படம், எங்க வீட்டுப் பெண், எம்ஜிஆர் நடித்த நான் ஆணையிட்டால், 1966ல் எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிப்பில் எம்ஜிஆரின் 100வது படமான ஒளிவிளக்கு, புதிய பூமி ஆகிய திரைப்படங்களை இயக்கினார் சாணக்கியா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆந்திராவில் என்.டி. ராமராவ் நடித்து பெரும் வெற்றி பெற்ற ராமுடு பீமுடு என்ற திரைப்படத்தை தமிழில் எங்க வீட்டுப் பிள்ளையாக இயக்கினார் சாணக்கியா. 1958 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பின்னர் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் எங்க வீட்டுப் பிள்ளை, அதுவும் வண்ண திரைப்படமாக வெளிவந்தது.
எங்க வீட்டுப் பிள்ளை திரைப்பட படப்பிடிப்பின்போது உரையாடல் எழுதிய சக்தி கிருஷ்ணசாமிக்கும் இயக்குநருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. நான் எழுதியதை மாற்றச் சொல்வதா என கூறி கோபமுற்ற சக்தி கிருஷ்ணசாமி உரையாடல் பேப்பரை கிழித்து எறிந்து அரங்கை விட்டு வெளியேறிவிட்டார். பின்னர் எம்ஜிஆர் தலையிட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது. அதேபோல் பாடல் காட்சியின்போது பாடல் வரிகளுக்கு ஏற்ற உடை அலங்காரம் இல்லை என தயாரிப்பாளர் நாகிரெட்டி கருதினார். இதனை அறிந்த எம்ஜிஆர் அடுத்த நாளில் பங்கேற்று குறையின்றி நடித்துக் கொடுத்தார்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளியான எங்க வீட்டுப் பிள்ளை பல திரையரங்குகளில் 25 வாரங்களை கடந்து வெள்ளி விழா படமாக அமைந்தது. அந்த காலத்திலேயே சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு கேளிக்கை வரி ஈட்டி தந்தது. ஹிந்தியிலும் நடிகர் திலீப் குமார் நடிப்பில் ராம் அவுர் ஷ்யாம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. எங்க வீட்டுப் பிள்ளையில் நடித்ததற்காக ரசிகர்கள் சங்கத்தின் விருதை பெற்றார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்களில் மாபெரும் வெற்றிப்படங்களில் முதல் வரிசையில் நின்று சாதனை படைத்தான் “எங்க வீட்டுப் பிள்ளை”.