’விவசாய பிரதிநிதிகளுக்கும் நியமன எம்.பி பதவி வழங்க வேண்டும்’ – பி.ஆர்.பாண்டியன்

கூட்டுறவு கடனுக்கான நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

கூட்டுறவு கடனுக்கான நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இழப்புக்கு ஏற்ப விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் ஆண்டுதோறும் போராடி வருவதால் தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டிற்குத் தனி காப்பீடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு சம்பா பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்த அவர், உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டும் காப்பீடு செய்வதற்கான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. இதனால், விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனக் கூறினார்.

உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேலை ஆட்கள் பற்றாக்குறை போக்குவதற்கும் வேளாண் இயந்திரங்களை அரசுகள் மானியத்தில் வழங்கிவரும் நிலையில், வேளாண் இயந்திரங்களுக்கு அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி அரசுக்கும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரி விதிப்பையும், உயர்வையும் கைவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி பேரழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு விவசாயிகளிடம் வெளிப்படையாகக் கருத்துக் கேட்காமலேயே அறிக்கை தாக்கல் செய்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,

அண்மைச் செய்தி: ‘‘தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை; தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்’

இஸ்மாயில் குழு அறிவிக்கப்பட்டதும், பின்னர் அறிக்கை சமர்ப்பித்ததும் மட்டும்தான் விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இதனால், ஓஎன்ஜிசியுடைய பாதிப்புகள் குறித்து முழுமையாகத் தீர்வு காணுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே, இஸ்மாயில் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்துள்ளதை நிறுத்தி வைத்து, மீண்டும் உடனடியாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வெளிப்படையாகக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திப் பாதிப்புகள் குறித்துக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளை அரசுக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என பிஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், இசைஞானி இளையராஜாவிற்கு மத்திய அரசு, நியமன உறுப்பினராகத் தேர்வு செய்ததை போல் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து போராடுகிற அமைப்பின் பிரதிநிதிகளையும் நியமன உறுப்பினர்களாக நியமனச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனக் கூறினார். மேலும், விவசாயிகளுக்குக் கூட்டுறவு கடன் வழங்குவதற்கான இலக்கீடுகளை மேற்கொள்ளும் போது நிலப்பரப்பின் அடிப்படையில் கடன் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனத்தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.