பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

சென்னையில் பொதுஇடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள…

சென்னையில் பொதுஇடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது சிறுமி ஆயிஷாவை மாடு கொம்பால் குத்தி தூக்கி வீசியது.

பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்றினர். தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் விவேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ஷெர்லி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

“பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை கண்காணிக்க பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளோம். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. சென்னையில் பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.