ஒரு இளைஞன் 100 ரூபாய்க்கு மதுவாங்காமல் அவன் அதை கொண்டு சினிமா பார்க்கிறான் என்றால் அது தான் மாற்றத்திற்கான சினிமா என மிஷ்கின் பேசியுள்ளார்.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள முத்தமிழ் பேரவை திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் இலக்கிய சங்கமம் நிகழ்ச்சியானது 14 ஆம் தேதி துவங்கி வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் முதல் நிகழ்ச்சியாக பவா செல்லதுரையின் பெருங்கதையாடல் நடைபெற்றது. அதில் நாஞ்சில் நாடனின் ” எட்டுத்திக்கும் மதயானை” என்ற நாவலின் கருத்துக்களை பவா செல்லதுரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து ” மாற்று சினிமா குறித்து யோசிப்போம்” என்ற தலைப்பில் கவிஞர்
இளைய பாரதி வரவேற்புரையாற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி சி ஸ்ரீராம்,
இயக்குனர்கள் மிஷ்கின்,ஞானவேல், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது, மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், எல்லா சினிமாவும் மாற்று சினிமா தான். சினிமாவிற்கு வர நினைக்கும் ஒரு இளைஞன் எங்கிருந்து வருகிறான் என்பதை விட அவன் ஒரு சினிமா எடுக்க நினைத்தாலே அவன் மாற்றத்தை தான் செய்கிறான். ஒரு இளைஞன் 100 ரூபாய்க்கு மதுவாங்காமல் அவன் அதை கொண்டு சினிமா பார்க்கிறான் என்றால் அது தான் மாற்றத்திற்கான சினிமா. நான் என் மனிதனை என் சகமனிதனாக பார்க்கிறேன். மிகச்சிறந்த இலக்கியங்களை கொடுத்த நாடு இந்தியா. மாற்று சினிமா இப்போது இல்லையென்றாலும் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
மேலும் இந்திய சினிமாவை புரட்டி போட்டது பராசக்தி. அது மாற்றத்திற்கான சினிமா என்றார். மேலும் முதல்மரியாதை உள்ளிட்ட படங்கல் மாற்றத்திற்கானவை என்றார்.
தொடர்ந்து பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நாம் பண்ணு அத்தனையும் மாற்று சினிமா தான், காலத்தால் அழியாது தான் மாற்று சினிமா. உதிரி பூக்கள் இன்னும் என் மனதில் நிற்கிறது என்னுள் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பாரதிராஜா எனக்கு ஒரு மாற்று சினிமாவாக தோன்றினார் என்றார்.








