”பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா?” – கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா? என கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

கீழடி நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வின் வரைவு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட இந்திய தொல்லியல் துறைக்கு முன்பு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அந்த வரைவு ஆய்வறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து  மத்திய கலாச்சார அமைச்சகம், கீழடி வரைவு ஆய்வறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தது. மேலும்  அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகளை குறிப்பிட்டு திருத்தங்கள் தற்போதுவரை  மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன என்றும்  அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சரின் பேச்சுக்கு  பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள், தொழில்நுட்பம் கொண்டவர்கள், மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?”

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.