அதிமுகவில் இணைந்து செயல்படுவேன்- இயக்குனர் பாக்யராஜ்

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய தம்மால் ஆன முயற்சியை செய்ய உள்ளதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம்…

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய தம்மால் ஆன முயற்சியை செய்ய உள்ளதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 17ம் தேதி அதற்கான தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பில் குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23ம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், தமிழக மக்கள் நலனுக்காக எம்.ஜி ஆர் அதிமுக கட்சியை துவங்கினார். அதற்கு அடுத்து ஜெயலலிதாவும், அதன் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் வந்தார்கள். கட்சி மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு படியாக இருந்தது. இடையில் திருஷ்டி பரிகாரம் போல் சோதனை ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். இதை தான் நானும் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு எம்.ஜி.ஆர். எப்படி கட்சியை விட்டு சென்றாரோ அப்படியே கட்சி வலுவோடு எம் ஜி ஆர் ரசிகர்களும், தொண்டர்களும் புத்துணர்ச்சி பெறும் வகையில் கட்சி மீண்டும் வலுப்பெறும். அதற்கு நானும் கட்சியில் இணைந்து என்னால் முடிந்ததை செய்வேன். என்னால் முடிந்த கட்சி பணியை ஆற்ற தயாராக இருக்கிறேன். எல்லோரும் ஒன்றிணைவார்கள் என்றார்.

ஆனால் அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும், அதிமுகவில் இருந்தவன் தான். இப்போது முறையாக இணைந்து செயல்படுவேன். எல்லாரும் நல்லா இருக்க வேண்டும். கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். அனைவரும் ஒன்றிணைய என்னால் ஆன முயற்சியை செய்வேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.