“எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” – அதிர்ச்சியை கிளப்பிய டெலிகிராம் நிறுவனர்! – பதிலளித்த எலான் மஸ்க்!

டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ், தனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் அதற்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.  பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும்,…

டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ், தனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் அதற்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபலமான சமூக வலைதளமாக விளங்கும் டெலிகிராமின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமாக இருப்பவர் பாவேல் துரோவ். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது.  ஆனால், அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த சூழலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் உயிரியல் தந்தையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது நண்பர் ஒருவர் குழந்தையில்லாமல் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும், அவரது வேண்டுகோளை ஏற்று முதன்முறையாக விந்தணுவை தானமாக கொடுத்ததாகவும் கூறினார்.  முதல்முறை விந்தணு தானம் கொடுத்தபோது கடும் தயக்கம் இருந்ததாகவும், ஆனால், தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் கொடுப்பது சமூக கடமை என்று மருத்துவர்கள் கூறியதாகவும் பாவேல் துரோவ் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தொடர்ச்சியாக விந்தணு தானம் செய்து வந்ததாகவும், அதன்மூலம் இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடைத்திருப்பதாகவும் பாவேல் துரோவ் கூறியுள்ளார்.  இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பே விந்தணு தானம் கொடுப்பதை தான் நிறுத்திவிட்டதாகவும், ஆனால் ஐவிஎஃப் மருத்துவமனையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் தனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும் என்றும் கூறியுள்ள பாவேல் துரோவ், இதேபோல பலரும் விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனது உயிரியல் குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள வசதியாக தனது டிஎன்ஏ விவரங்களை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெலிகிராமில் இந்த பதிவை 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். அதேபோல், இதன் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. அதற்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த இடுகைக்கு பதிலளித்தார்,  எலான் மஸ்க் இது குறித்து கூறும்போது, “‘செங்கிஸ் கானை விட குறைவான எண்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

செங்கிஸ்கான் உலகின் தலைசிறந்த மற்றும் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவர்.  இவர் பல குழந்தைகளுக்குத் தந்தையாக அறியப்பட்டவர். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனடிக்ஸ் இதழில் “மங்கோலியர்களின் மரபணு மரபு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, உலக ஆண் மக்கள்தொகையில் 0.5 சதவீதம் பேர் கானின் மரபணு வழித்தோன்றல்கள் என்று கண்டறிந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.