இயக்குநராகும் எண்ணத்தை கைவிட்டேன் – மனம் திறந்த பி.சி.ஸ்ரீராம்

தான் இயக்கிய படங்கள் மூலம் தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் படம் இயக்குவதை கைவிட்டு விட்டேன் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.   தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக வளம் வரும் பி.சி.ஸ்ரீராம்.…

தான் இயக்கிய படங்கள் மூலம் தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் படம் இயக்குவதை கைவிட்டு விட்டேன் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக வளம் வரும் பி.சி.ஸ்ரீராம். ‘மெளனராகம்’,’ நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘அலைபாயுதே’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள அவர் ‘மீரா’, ‘குருதிப்புனல்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய மூன்று படங்களையும் இயக்கி உள்ளார்.

 

இந்நிலையில், தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராசி கண்ணா நடித்துள்ள ’தேங்யூ’ என்ற தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பி.சி.ஸ்ரீராம், சமூகத்தில் மனித நேயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றார்.

 

ஒருவரோடு ஒருவர் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்கள். நன்றியையும் மறந்துவிட்டார்கள். இந்தச் சூழலில் ’தேங்யூ’ போன்ற ஒரு படம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோது, கதையோடு தான் ஒன்றிப் போனதால், ஒளிப்பதிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறினார். என் மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவுக்கு சம்மதம் தெரிவிப்பேன். இதற்காக கதை முழுவதும் கேட்பேன் என்றார்.

இதுவரை தான் இயக்குநராவதற்கு சில முயற்சிகளை செய்தேன் என்ற அவர், தான் இயக்கிய மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை என்றார். ஒளிப்பதிவு வேறு, திரைப்படத்தை இயக்குவது வேறு என்பதை புரிந்து கொண்டதால் இனி திரைப்படத்தை இயக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக பி.சி.ஸ்ரீராம் தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.