மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி, தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்னையும் கட்சி தரப்பில் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மாவ்ரி தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும், அது கட்சிக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் களம் காணுகின்ற அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரை செய்து வரும் நிலையில், மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாவ்ரி அந்த பேட்டியில், தங்கள் கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும், அதில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாஜகவில் எந்த ஜாதி, எந்த மதம், என்பதையெல்லாம் யாரும் பார்பதில்லை எனவும், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம், உணவு பழக்கமாக எதையும் வைத்துக் கொள்ளலாம், ஒரு அரசியல் கட்சிக்கு ஏன் பிரச்சனை வர வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார்.
பிறகு, பசு வதை தொடர்பான பாஜகவின் நிலைப்பாடு குறித்து பேசிய எர்னஸ்ட் மாவ்ரி ”மேகாலயாவில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். நாங்கள் எங்கள் சொந்த உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். அதற்கு எந்த தடையும் இல்லை, எங்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை” என பதிலளித்துள்ளார்.
60 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மேகாலயாவில் 34 இடங்களையாவது வெல்வோம். இதுவே எங்களின் கணிப்பு. எங்களுக்கு வாக்களிக்கிறார்களா இல்லையா என்பது மக்களின் கையில் தான் உள்ளது. மாநிலத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்பினால், அவர்கள் கண்டிப்பாக பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா





