”இனி உண்மையாக போற கதைகளை படமாக எடுக்க இருக்கிறேன்” – கமல் 233 குறித்து இயக்குநர் எச்.வினோத் பேட்டி!

”கமல் – 233 கதை விவசாயம் தொடர்பானது அல்ல” –   ”நான் இனி உண்மையாக போற கதைகளை படமாக எடுக்க இருக்கிறேன்” என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். கமல் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும்…

”கமல் – 233 கதை விவசாயம் தொடர்பானது அல்ல” –   ”நான் இனி உண்மையாக போற கதைகளை படமாக எடுக்க இருக்கிறேன்” என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

கமல் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

‘ரைஸ் டூ ரூல்’ (rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.

இந்நிலையில், இயக்குநர் ரா. சரவணன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் எச்.வினோத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

என்னுடைய அடுத்த படம் கமல் சாருடன் சேர்ந்து பண்ண உள்ளேன். அது விவசாயம் தொடர்பான படம் இல்லை. அவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அந்தப் படத்தை தயாரிக்கிறது. கமல் சாரிடம் இரண்டு, மூன்று கதைகள் பேசினோம். ஆனால் அவர் சொன்ன கதைகள் ரொம்பவே இன்ரஸ்டிங்காக இருந்தது. அந்த கதைக்கு திரைக்கதை எழுதி படமாக்குகிறோம்.

விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் இருக்கிறது. மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்த பிறகு பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்க அவர் செய்த செயல்கள் குறித்து எனக்கு தெரிய வந்தது. இதையடுத்தே அவர்களை கமலிடம் அழைத்து சென்று நெல் ஜெயராமன் குறித்த விஷயங்களை எடுத்து சொன்னோம்.

அதை கேட்ட கமல் நிறைய ஐடியாக்களை கொடுத்திருக்கிறார். பாரம்பரிய நெல்களுக்காக ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு நெல்லிலும் என்ன வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். எதிர்காலத்தில் இவற்றை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நிறைய உண்மைக் கதைகள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ”நான் இனி உண்மையாக போற கதைகளை படமாக எடுக்க இருக்கிறேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.