திமுக எம்எல்ஏவும், திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவருமான உதயநிதி ஸ்டாலின் அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல; சாதாரண நடிகர்தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கன்னட மொழியில் 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் படமாக்கப்படுகிறது. இத்திரைப்படம் ராஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரபி படத்தின் டீஸர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல; சராசரியான நடிகர் தான். கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில், ஒரே ஒரு சீன் நடித்துள்ளேன். அவ்வளவு தான். நான் நடித்தால் என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானே தான் படம் பார்க்க வேண்டும்” என்றார் அண்ணாமலை.








