மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

வாலாஜாபேட்டை அருகே மூன்று பேரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் பாலுவின் உறவுக்காரரான விஜய் (26) என்ற வாலிபருடன் புவனேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் புவனேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவனை பிரிந்து வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் புவனேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த பாலு ஆத்திரத்தில் நேற்று இரவு கீழ் புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்று புவனேஸ்வரியை வெட்ட முயற்சித்துள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த அவரது தாய் புவனேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற சொல்லி காப்பாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலு மாமியார் பாரதியை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புது குடியானூர் சென்ற பாலு விஜயை தேடியுள்ளார்.

அப்போது விஜய் இல்லாததால் அவரது தந்தை அண்ணாமலை மற்றும் தாய் ராஜேஸ்வரி ஆகியோரை இரும்புராடால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த பாலு கொண்டபாளையம் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.