உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
வட இந்தியாவில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் நொய்டா மற்றும் காஜியாபாத்தில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை, (ஜூலை 23), ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரித்ததால் கௌதம் புத்த நகர் நிர்வாகம், ஹிண்டனை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ஈகோடெக் 3 அருகே ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின. கடும் வெள்ளம் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தற்போது, NDRF குழுவினர் அட்டார் நங்லா உள்ளிட்ட கிராமங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.







