இன்றைய மனிதீ ஸ்பெஷலில் துர்கா பாய் காமத் குறித்து பார்ப்போம்.
இந்திய சினிமாவின் முதல் பெண் நடிகை துர்கா பாய் காமத். இவர் தாதாசாகேப் பால்கேயின் இரண்டாவது படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் முதல் கதாநாயகியாக அறிமுகமானார். இது இந்திய சினிமாவில் இது ஒரு மைல்கல் என்றாலும், நடிகைகள் விலைமாதர்களாகக் கருதப்பட்ட காலத்தில் துர்கா பாய் நடிகையாகத் தனது பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டார். இதனால் பெண் கலைஞர்கள் திரைப்படங்களில் பணியாற்ற முன்வராத நிலையில் அத்தனை தடைகளையும் தாண்டி படங்களில் நடித்து வந்தார். அதே நேரத்தில் அவரது மகளை படத்தில் நடிக்கவைத்து இந்தியத் திரைத்துறையின் முதல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கினார்.
துர்காபாய் காமத் 1899 இல் அசோனோரா, பர்தேஸில் பிறந்தார். 1903 ஆம் ஆண்டு, மிகச் சிறிய வயதிலேயே, ஜே.ஜே.யில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த தனது கணவர் ஆனந்த் நானோஸ்கரிடமிருந்து பிரிந்தார்.தன் மகளின் பொறுப்பை கையில் வைத்துக்கொண்டு, காமத் ஒரு டிராவல்லிங் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். அவளது இந்தச் செயல் அவரின் சமூகத்தினரை ஆத்திரமடையச் செய்தது. அவர்கள் அவளை சமூகத்திலிருந்து விரட்டியடித்தனர். அவரது வாழ்க்கையைத் தொடங்கியபோதே பல தோல்விகளைக் கண்டார். அரங்கில் பெண்கள் நுழைவதை அச்சுறுத்துவதாக உணர்ந்த ஆண்கள் மேடையில் ஒரு பெண் இருப்பதை கடுமையாக எதிர்த்தனர்.
மகத்தான திறமையும், கடின உழைப்பும் உள்ள ஒரு பெண்மணி அவர். அக்காலத்தில் பள்ளிப் படிப்பின் இறுதியாண்டாகக் கருதப்பட்ட ஏழாம் வகுப்பை முடித்திருந்தார். அவர் டிராவலிங் நாடக நிறுவனத்துடன் பயணத்தில் இருந்தபோது, தனது மகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்க முயற்சித்தார்.
காமத்தின் செயல் பல பெண்களை சினிமாவில் பணிபுரிய ஊக்கப்படுத்தியது. ஆனால் வெகு காலத்திற்குப் பிறகுதான் அந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. காமத்தின் மகள் கம்லாபாய் கோகலே, அவரது பேரன், மூத்த மராத்தி நடிகர் சந்திரகாந்த் கோகலே மற்றும் அவரது கொள்ளுப் பேரன்கள் விக்ரம் கோகலே மற்றும் மோகன் கோகலே ஆகியோருடன் நடிப்பின் மரபு தொடர்ந்தது. மே 17, 1997 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் தனது 97 வயதில் இறந்தார்.







