தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்றதாக எத்தனை லாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக
அரசுக்கும், மனுதாரருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் செல்ல
ராஜாமணி தாக்கல் செய்த மனுவில், கட்டுமான பொருட்களான மணல், கற்களை
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும்படி குவாரி உரிமையாளர்கள்
லாரிகளை நிர்பந்திக்கப்பதாகவும், அதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும்
ஓட்டுநர்கள் மீது வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, அதிக அளவில் மணலை ஏற்றிச் செல்ல நிர்பந்திக்கும் குவாரி உரிமையாளர்கள்
மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், இதுதொடர்பாக அரசுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும்
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என்றும், அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்வதைத் தடுக்காத அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி
ஆதிகேசவலு அமர்வு, தமிழகத்தில் அதிக அளவில் மணல் மற்றும் கற்கள் ஏற்றிச்
சென்றதாக எத்தனை லாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறித்த
விவரங்களைத் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும்
உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.







