படம் தொடங்கு முன்னர் இது கற்பனைக் கதை என படக்குழுவினர் பொறுப்பைத் துறந்துவிட்டாலும், விவரம் அறிந்தவர்களுக்கு அது உண்மைச்சம்பவங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். இருப்பினும் படக்குழுவினர் அறிவித்தது போல இது கற்பனைக்கதை என்றாலும் ரத்தமும் சதையுமாக ஒரு படைப்பை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தாலும், நாயகனாய் நடித்த சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் திரையில் மிரட்டுகிறார்கள்..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போ விஜய் சேதுபதி? அவர் சில காட்சிகளில் வந்தாலும் அடுத்த பாகத்தில் நிறைவாய் ரசிகர்களுக்கு விருந்துபடைப்பார் என நம்புவோம்.. ஆனாலும் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய்சேதுபதி நடிப்பில் வாத்தியார்தான்.
அழகான காதல் கதையோட்டத்தில் பின்னியிருந்தாலும், காவல்துறையின் இன்னொருபக்கத்தை (ஏற்கனவே விசாரணை, ஜெய்பீம், காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் பார்த்திருந்தாலும்) கதையாக்கியதில் வெற்றிமாறன் வெற்றி கண்டிருக்கிறார்.
முதல் காட்சி ரயில்விபத்தில் தொடங்கியதில் இருந்து கடைசி காட்சிவரை ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கடும் உழைப்பு நம்மை கட்டிப்போடுகிறது. அதிலும் அந்த கடைசி 20 நிமிடங்கள் பரபரப்பின் உச்சம். வளைந்து நெளிந்து ஓடும் கேமரா நாமே களத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இளையராஜா பாடல்களில் வருடி இருக்கிறார். பின்னணியில் மிரட்டி இருக்கிறார். ஆரம்ப காட்சியில் சூரி தனது உயரதிகாரியிடம் பேசிக்கொண்டே செல்லும்போது அவர் என்கவுண்டர் குறித்து சொல்லும் பதில் ஒரு நொடி காவலர்களை நியாயப்படுத்தினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகள் அவர்களின் மறுபக்கத்தை வெட்ட வெளிச்சம் ஆக்குகிறது. ஆய்வாளராக வரும் சேத்தன் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை நடத்தும் விதம், மேலதிகாரியான கவுதம் வாசுதேவ் மேனன் சம்பவங்களை கையாளும் விதம் இரண்டுமே வேறு ரகமாய் இருந்தாலும் அதிகாரம் என்னென்ன செய்யும் என்பதை இயக்குநர் சிறப்பாக கையாண்டு காட்சிப்படுத்தி இருப்பதற்கு எழுந்துநின்று கைதட்டலாம்.
கடைநிலை காவலராக வரும் சூரி நடிப்பில் பிரம்மிப்பூட்டுகிறார். காவலராக இருக்கும் தன்னிடம் காதலி தனது பின்புலத்தை வெளிப்படுத்தும் இடத்தில் குழம்பிப்போனவராக கடந்து செல்வது, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுத்து தண்டனைகளை ஏற்றுக்கொள்வது, பாராட்டப்பட வேண்டிய இடத்தில் தண்டிக்கப்படுவது என காட்சிக்குக் காட்சி நடிப்பில் மிரட்டுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதிலும் அவர் துப்பாக்கியை தொடும் நேரத்தில் இளையராஜா தான் இசைராஜா என ரசிகர்களால் கொண்டாடப்படும் காரணத்தை வெளிப்படுத்தி விடுகிறார்.
திடீரென முடிந்தது போல் அதிருப்தியை படம் ஏற்படுத்தினாலும் அடுத்த பாகத்திற்கான ’லீட்’ காட்சிகள் எப்படியும் இரண்டாம் பாகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையை உருவாக்குகிறது. ’என்ன பிடிச்சுட்டு வந்து, நாலுபேரு வச்சு அடிச்சு, என்ன அம்மணமாக்கி தரையில உக்கார வச்ச பிறகு தான் நாம சமமாக முடியும்னா… பேசுவோம் என வாத்தியார் கால்மேல் கால் போடும் அந்த காட்சி மாஸோ மாஸ்… இரண்டாம் பாகத்தில் இந்த மாஸான காட்சியைக் காணவே மீண்டும் தியேட்டருக்கு போக தோன்றும்…
மொத்தத்தில் உரிமை பேசும் இந்த திரைப்படம் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்படம். ஆனால் வன்முறைக்காட்சிகள் மிகுந்து இருப்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்கலாம்.