ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ் மற்றும் ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இயக்கத்தில், பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் மற்றும் டேவிட் கல்லாஹம் ஆகியோரால் மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையில் SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் ஜூன் 1, 2023 அன்று 10 மொழிகளில் வெளியிட்டுள்ளது.
ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மற்ற பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவது. இப்படம், 2018 இல் வெளிவந்த அனிமேஷன் திரைப்படமான “ஸ்பைடேர்-மேன்: இன் டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்” எனும் படத்தின் தொடர்ச்சிக் கதையாகும். மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனை அனிமேஷனில் உருவாக்கி எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் இது. கணினியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களால் (CGI) ஸ்டாப்-மோஷன் அனிமேஷனாக எடுக்கப்பட்ட முதல் ஸ்பைடர்-மேன் தொடர் இதுவே!
இப்படம் மூன்று பாகங்கள் கொண்ட தொடரின் இரண்டாவது படம். அமெரிக்க ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் “மைல்ஸ் மோரல்ஸ்” என்றும்; இந்திய ஸ்பைடர் மேன் “பவித்ர் பிரபாகர்” என்றும் அழைக்கப்படுகின்றனர். ப்ரூக்ளினின் முழு நேர ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸ், க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பின், மல்டிவெர்ஸில் சிக்கி, பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் சொசைட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சொசைட்டியில் உள்ள ஸ்பைடர்-மக்கள், தங்கள் பிரபஞ்சங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் புதிதாய் முளைக்கும் அச்சுறுத்தலை எவ்வாறு கையாள்வது என்பதில் ஹீரோக்கள் மோதும்போது, மைல்ஸ் மொரால்ஸ், ஹீரோவாக இருப்பது என்றால் என்னவென்று உறுதியான தீர்மானத்தை எடுப்பதோடு, அதனால் உலகையும், தன் குடும்பத்தையும், அவர் மிகவும் நேசிக்கும் நபர்களையும் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொள்கிறார். முகமூடியை யார் வேண்டுமானாலும் அணியலாம் ஆனால் அவர்களின் செயற்பாடுகளே யார் ஹீரோ என்பதை தீர்மானிக்கும் எனும் தத்துவத்துடன் படம் முடிவடைகிறது.
இப்படி எல்லாம் கதையை யோசித்து எடுக்க முடியுமா? எனும் ஆச்சரியரத்திற்குள் நம்மை கொண்டு செல்வதோடு பல வில்லன்களை எதிர்த்து கடந்து வந்த ஸ்பைடர் மேனுக்கு தற்போது ஸ்பைடர் மேன் தான் வில்லன் என்பது மார்வெலின் புல்லரிக்கும் தருணம்.
இந்தியாவின் ஸ்பைடர் மேனாக பவித்ர் பிரபாகர் மும்பையில் வசிக்கிறார். அவரின் கதாபாத்திரம் இந்திய ரசிகர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அவரின் கதைக்களம், காட்சியமைப்பு, ஆடை, அலங்காரம் என அனைத்தும் மார்வெலின் இந்திய ரசிகர்களுக்கான ட்ரீட்.







