2004−ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது இலங்கையில் 1,700 பேர் உயிரிழந்த மாதரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தான் மிகக் கோரமான ரயில் விபத்தாக உலக வரலாற்றில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வரிசையில் ஒடிசா ரயில் விபத்தும் இணைந்துள்ளது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30 மணிக்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த ஒடிசா ரயில் விபத்தை KAVACH தொழில்நுட்பம் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ரயில்கள் மோதுவதை தடுக்கும் KAVACH தொழில்நுட்பம் என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ரயில்வேயில் இத்தகைய தொழில்நுட்பம் இருந்தும் விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவின் முழு ரயில் வலையமைப்பிலும் கவாச் தொழில்நுட்பம் இன்னும் நிறுவப்படவில்லை. மேலும் விபத்து நடந்த பகுதியிலும் கவாச் தொழில்நுட்பம் அமைக்கப்படாமல் இருக்கிறது.
KAVACH தொழில்நுட்பம் இல்லாதது தான் ஒடிசா ரயில் விபத்திற்கு காரணமா?
KAVACH தொழில்நுட்பத்தின் பயன்கள் என்னவென்று பார்க்கலாம்….
• ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்தால் அவை மோதாமல் தடுக்க KAVACH உதவும்
• ரயில்வே பாதுகாப்புக்கென 3 நிறுவனங்களின் உதவியோடு உள்நாட்டிலேயே KAVACH உருவாக்கப்பட்டது
• மோசமான வானிலை காலங்களிலும் ரயிலின் செயல்பாடுகளை KAVACH தொழில்நுட்பம் பாதுகாக்கும் KAVACH தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம்.
மேலும் இந்த மாதிரியான கோர விபத்து நிகழாமல் தடுக்க இந்தியாவில் விரைவில் KAVACH தொழில்நுட்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– சௌந்தர்யாகண்ணன்




