இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? – மினி விமர்சனம்!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

கோலிவுட்டில் இந்த வாரம் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடித்த ‘நுாறுசாமி’, சமந்தா நடித்த ‘எங்கள் தங்கம்’, மஞ்சும்மல்பாய்ஸ் சிதம்பரத்தின் ‘பாலன்’, ரவிமரியா கதைநாயகனாக நடித்த ‘மக்கள் தலைவா ஆதர்ஷ், ஜோவிடா நடித்த ‘டார்க் ஜெயண்ட்’, புதுமுகங்கள் நடித்த பதினென் கீழ்கணக்கு, மனு மற்றும் மலையாள டப்பிங் படமான மதுபாலாவின் சின்ன சின்ன ஆசை ஆகிய படங்களும், மெர்சல், ஜில்லா படங்கள் ரீ ரிலீஸ் ஆக வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ.

நுாறுசாமி:

26 வயதில் கணவனை இழந்த ஸ்வாசிகா, கரும்பு வெட்டி, விவசாய கூலியாக வேலை பார்த்து, டிராவல்ஸ் கம்பெனியில் வேலை செய்து, தனது 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அவருக்கு 42வயதாகும் போது மகன்கள் நல்ல நிலைக்கு வந்து திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். ஆனால், அவர்களோ அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்துவிட்டு தான் நாங்கள் திருமணம் செய்வோம் என்கிறார்கள். அவரை திருமணம் செய்ய மனைவியை இழந்த விஜய்ஆண்டனி சம்மதிக்கிறார். ஆனால், அந்த ஊரில், சொந்தபந்தங்களில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதை மீறி ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி திருமணம் நடந்ததா? இதுதான் சசி இயக்கிய நுாறுசாமி படத்தின் கதை. கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமம் ஒன்றில் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த கதை உருவாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மறுமணம் பின்னணியில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் பேசும் விஷயம், சொல்லும் கருத்து தனிரகம். ஒரு பெண்ணின் பார்வையில் பல விஷயங்கள் கேள்விகளாக வந்து விழுகின்றன. விதவை பெண்ணின் மறுமணத்துக்கு ஆதரவாக சொந்த மகன்களே முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதேசமயம், அந்த பெண்ணின் சொந்த அண்ணன், அக்கா, ஊர் மக்கள் என பலர் எதிர்க்கிறார்கள். இதை உணர்வுபூர்வமாக, அழுத்தமாக, ஒரு சமூக புரட்சி கருத்தாகவே நுாறுசாமியில் பதிவு செய்து இருக்கிறார் சசிகுமார். பல எதிர்ப்புகளை காண்பித்தாலும் பாசிட்டிவ் ஆக படத்தை முடித்தது கூடுதல் பிளஸ்.

செல்வி என்ற அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கும் ஸ்வாசிகாவுக்கு தேசியவிருது உட்பட பல விருதுகளை கொடுத்து பாராட்டலாம். கள்ளக்குறிச்சி வளையாம்பட்டு கிராமத்து பெண்ணாகவே தெரிகிறார். அவரின் பேச்சு, கேள்வி கணவனை இழந்த பல பெண்களின் குரலாக இருக்கிறது. மகன்களை வளர்க்க கஷ்டப்படுவது, ஊரார் கேலி கிண்டல், மறுமணத்துக்கு யோசிப்பது, மகன்களுடன் பாசப்போராட்டம் நடத்துவது, விஜய் ஆண்டனியை பார்த்து பேசுவது, குடும்ப உறவுகளால் காயப்படுவது பல இடங்களில் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். சில இடங்களில் அழவும் வைக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த கேரக்டரும், இந்த கருவும் முக்கியமான பதிவாக இருக்கும். வசனங்களை மறக்க பல ஆண்டுகள் ஆகும்.

மகன்களாக நடித்த அஜய், சக்தி இருவரும் பாசத்தால் உருகி, நல்ல மகன்களாக வருகிறார்கள். கொஞ்ச நேரம் வந்தாலும் விஜய்ஆண்டனி கேரக்டரும், அவரின் கிராமத்து பேச்சு, நடிப்பும் நம்மை ரசிக்க வைக்கிறது. ஸ்வாசிகா அண்ணனாக வருகிற கருணாஸ், அக்காவா வருகிற சபிதாராய், வில்லங்க ஊர்பெரியவர் பாலாஜிசக்திவேல், மகன்களின் காதலியாக வருகிற காவ்யா அனில், பாடினிகுமார் என பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன. முதற்பாதி வேகம் குறைவு, சீரியசான படத்தில் தேவையற்ற யூடியூப் காமெடிகள், சினிமாதனமான இடைவேளை சற்றே வலு குறைந்த கிளைமாக்ஸ் என குறைகளும் இருக்கின்றன.

பாலாஜி ஸ்ரீராம் இசையும், தர்ஷன் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ். அம்மாவை சாமியாக பார்க்க வேண்டாம். அவர்களை மனுஷியாக பாருங்க என்று கருவும், அதற்கு உறவுகள், ஊர் மக்கள் துணை நிற்க வேண்டும் என்ற குரலும் நுாறுசாமி படத்தை இந்த ஆண்டு தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் முக்கியமான படைப்பாக மாற்றுகிறது.

எங்கள் தங்கம்:

தெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதைநாயகியாக நடித்த மா இண்டி பங்காரம் படம், தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரி்ல் டப்பிங் ஆகி உள்ளது. காதல் திருமணம் செய்த சமந்தா, தனது கணவரின் சொந்த ஊரில் நடக்கும் நாத்தனார் திருமணத்துக்கு செல்கிறார். அந்த குடும்ப பெண்கள் அவரை ஏற்க மறுக்கிறார்கள். சமையல், சடங்குகள் கூட தெரியவில்லை என குறை சொல்கிறார்கள். அப்பாவியான சமந்தா தனது தோழி உதவியுடன் அந்த குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குகிறார். இந்த சூழ்நிலையில், திருமணம் நடக்க உள்ள சில நாட்களுக்கு முன்பு வில்லன் குஷ்ஷன் தேவய்யா ஒரு பெரிய கூட்டத்துடன் வந்து அந்த வீட்டை தாக்குகிறார். அவர்களை எதிர்த்து துப்பாக்கி, கத்தி, அரிவாளால் கடும் சண்டைபோடுகிறார் சமந்தா. அவர் சாதாரண பெண் அல்ல, ஒரு காலத்தில் ஒரு தீவிரவாத கூட்டத்தில் இருந்தவர், அப்போது குல்சன் தேவய்யாவுக்கும் அவருக்கு பகை என்ற உண்மை தெரிகிறது. அந்த சண்டையில் வெற்றி பெற்றது யார்?சமந்தா அப்படி மாறக்காரணம் என்ன என்பது எங்கள் தங்கம் கதை.

முதற்பாதி முழுக்க அப்பாவிதனம், குடும்ப சிக்கல், சமையல், கோலம், கோயில் வழிபாடு, தோழியுடன் காமெடி என அப்பாவியாக, ஹோம்லி லுக்கில் அசத்தியிருக்கிறார் சமந்தா. தனது குடும்பத்துக்கு எதிரிகளால் பிரச்னை என்று தெரிந்தவுடன் பழைய ஆக் ஷன் அவதாரத்துக்கு மாறுகிறார். ஒரு கார் சேசிங்கில் எதிரிகளை பந்தாடுகிறார். இன்னொரு சண்டைகாட்சியில் அதிர வைக்கிறார். குறிப்பாக, அந்த பெரிய வீட்டில் நடக்கும் நீண்ட சண்டைக்காட்சியில் விஜயசாந்தி ரேஞ்சுக்கு சண்டை போட்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார். அவரே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் மற்றவர்களை விட அவருக்கே அதிக சீன், அதிக பில்டப். ஆக் ஷன் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து இருக்கலாம். சந்தோஷ்நாராயணன் இசையமைப்பாளர் என்றாலும் பாடல்களில் பெரிய பிளஸ் இல்லை. சமந்தா ரசிகர்களுக்கு ஏமாற்றம். சமந்தா கணவராக வரும் திகந்தமஞ்சாலே, வில்லன் குல்ஷன், மாமியார் கவுதமி உட்பட பலருக்கும் நடிக்க வாய்ப்பு இல்லை. பிளாஷ்பேக் காட்சியில் வலு இல்லை. சமந்தா தோழியாக வரும் மஞ்சுஷா மட்டும் நடிப்பு, காமெடியால் மனதில் நிற்கிறார். அரசியல்வாதி காட்சிகள், காமெடி காட்சிகள் சுமார்.

பாலன்:

மஞ்சும்மல்பாய்ஸ் என்ற சூப்பர் ஹிட் கொடுத்த சிதம்பரத்தில் அடுத்த படம். ஆவே சம் ஜித்துமாதவன் இந்த கதையை எழுதியிருக்கிறார். முதல் படத்தில் நட்பை பற்றி பேசியவர், இதில் அம்மா, மகன் பாசத்தை திரில்லர் கலந்து கொடுத்து இருக்கிறார். ஒரு குற்றத்துக்காக ஜெயிலில் இருக்கும் பர்சனா, தனது சின்ன வயது மகன் ஆதிசேஷனுடன் ஒரு பெண் சிபாரிசால் வெளியே வருகிறார். ஒவ்வொரு ஊரில், ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு வேலை செய்கிறார். கடைசியில் ஒரு மலை பிரதேச வீட்டில் தனியே வசிக்கும் பாட்டியின் உதவியாளர் ஆகி, மகனை பக்கத்து பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர் வெளியே வர காரணமான பெண் தவறான தொழில் செய்ய டார்ச்சர் செய்கிறார். அப்போது பர்சனா என்ன செய்கிறார். பாட்டி இறந்தவுடன் அவர் மீண்டும் ஜெயிலுக்கு போனது ஏன், அப்போது தாயை பிரிந்த மகன், பல ஆண்டுகள் கழிந்து மீண்டும் தாயுடன் சேர்ந்தானா? தாய் எப்படி இருந்தார் என்பது பாலன் கதை.

அம்மாவாக நடித்த பர்சனா, மகனாக நடித்த ஆதிசேஷன், ஊர், ஊராக செல்வது என முதற்பாதி தொடங்குகிறது. அந்த பாட்டியுடன் தங்கியதும் கதையில் மாற்றம். பிற்பாதி முழுக்க அம்மாவை தேடி மகன் அலைவது என கதை நகர்கிறது. அம்மாவாக நடித்த பர்சனா புதுமுகம் என்றாலும், அவர் கண்களே ஆயிரம் கதை சொல்கின்றன. அவரின் கேரக்டர் வடிவமைப்பு, உடல்மொழி எல்லாமே வித்தியாசம். மகனாக வரும் ஆதிசேஷனும், அந்த பாட்டியும் நடிப்பில் பின்னியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வளர்ந்த மகனாக ஜினன், பழிவாங்கும் குணம் போலீசாக ஜீன்பால் நடித்து இருக்கிறார்கள். அந்த பையனை பல ஆண்டுகள் வளர்க்கும் குடிகாரனாக டொவினோ தாமஸ் வருகிறார். அவர் நடிப்பு, கெட்அப் வித்தியாசமாக இருக்கிறது. அம்மா, பாசத்தை அழுத்தமாக சொன்ன இயக்குனர், திரைக்கதையில் அதிலும் 2ம் பாதியில் சொதப்பி இருக்கிறார். அம்மாவுக்கும், மகனுக்குமான காட்சிகள் அவ்வளவு பிரஷ், அந்த பாட்டி, பள்ளிக்கூட சீன்கள், முதற்பாதி போலீஸ் ஸ்டேஷன் சீன்கள் ஓகே.

கிளைமாக்ஸ் உணர்வு பூர்வமாக இருக்கிறது. ஆனால், போலீஸ் சம்பந்தப்பட்ட சீன்களின் ரசிப்புதன்மை இல்லை. முதற்பாதியில் இருந்த விறுவிறுப்பு, திருப்பம் பிற்பாதியில் இல்லை. சை ஷூகாலித் ஒளிப்பதிவும், ஷியாம் இசை நச்.ஆனால், இடைவேளைக்குபின் அந்த அம்மா கேரக்டர் காணாமல் போய், கடைசியில் வருகிறது. அந்த கேரக்டர் பிளாஷ்பேக் பல கேள்விகளை எழுப்புகிறது. மஞ்சும்மல்பாய்சை ஒப்பிட்டால் பாலன் ஏமாற்றம், ஆனால், ஒரு வித்தியாசமான மலையாள படம்.

மக்கள் தலைவா:

ராம்தேவ் இயக்கத்தில் ரவிமரியா, ராதாரவி, நாஞ்சில்சம்பத், பழ.கருப்பையா நடித்த அரசியல் கலந்த சட்டையர் படம். ஊரில் பில்டப் கொடுத்துக்கொண்டு, வீண் விளம்பரம் செய்து கொண்டு திரியும் ரவிமரியாவை சினிமா ஹீரோ ஆக்கி, அரசியல் கட்சி தலைவர் ஆக்குகிறார் தொழிலதிபர் ராதாரவி. அவரை முதல்வர் ஆக்காதது ஏன்? ராதாரவி யார்? அவர் பிளான் என்ன? அது வெற்றிகரமாக நடந்ததா என்பது மக்கள் தலைவா கதை. வெட்டி பந்தா பார்ட்டியாக, நடிகராக, அரசியல்வாதியாக ஓரளவு நடித்து இருக்கிறார் ரவிமரியா.

ஆனாலும், இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். அரசியல் வாதிகளாக பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் சிறப்பாக ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். கொஞ்ச சீனில் வந்தாலும் கிங் மேக்கராக ராதாரவி மிரட்டியிருக்கிறார். பல அரசியல் சம்பவங்கள், அரசியல் தலைவர்களை படம் ஆங்காங்கே காண்பித்து கிண்டல் செய்கிறது. டாஸ்மாக்கில் 10 கூடுதல் கேட்பவரை எதிர்த்து போராடுபவராக இயக்குனர் பேரரசு வருகிறார். கடைசியில் இயக்குனரே மனநலம் பாதிக்கப்பட்ட முதல்வராக வந்து படத்தை முடிக்கிறார்.அரசியல் கிண்டல், பாதிப்பு பெரிதாக வொர்க் ஆகவில்லை. ஒரு மனம்நலம் பாதிக்கப்பட்டவரை முதல்வராக ஆக்கும் இயக்குனரின் கருத்தை ஏற்க முடியவில்லை. படத்தில் கமர்ஷியல் விஷயங்களும் குறைவு.

டார்க் ஜெயண்ட் :

சென்னையில் வசிக்கும் ஹீரோ ஆதர்ஷ், மனைவி, தங்கையுடன் சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்குள்ள நிலத்தை விற்று கடனை அடைக்க நினைக்கிறார். ஆனால், அந்த வீட்டில் பல அமானுஷ்யம் நடக்கிறது. அங்கே வசிக்கும் தாத்தா கர்ப்பிணியான ஆதர்ஷ் மனைவியை நரபலி கொடுக்க நினைக்கிறார். அதற்கு காரணம் ஒரு துர்சக்தி. அந்த பிடியில் இருந்து அவர்கள் மீண்டார்களா? அந்த துர்சக்தி பின்னணி? அந்த குடும்பம் அடைந்த நிலை ஆகியவற்றை விளக்கும் படம் டார்க் ஜெயண்ட், கே.எஸ்.கிஷான் இயக்கியிருக்கிறார். சென்னை காட்சிகளை விட கிராமம், அந்த வீடு, இரவு நேர திகல், சாத்தான் அட்டகாசம், நரபலி பின்னணி ஆகியவை விறுவிறுப்பாக இருக்கிறது.

ஹீரோவா நடித்த அதர்ஷ் அமைதியாக இருந்தாலும், அந்த சாத்தான் காட்சிகளில், மனநிலை மாறும் இடங்களில் கவர்கிறார். அவர் மனைவியாக வரும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடாவுக்கு வலுவான வேடம். நரபலிக்கு மறுக்கும் இடங்களில், கணவன் நிலை அறிந்து தவிக்கும் இடங்களில் கலக்கியிருக்கிறார். ஹீரோ தங்கயைாக வரும் கீர்த்தி, கடன்கொடுத்தவராக வரும் அமுதவாணனும் நல்ல தேர்வு. இந்த சிக்கலுக்கு தீர்வு சொல்லும் கேரக்டரில் கிளைமாக்சில் வரும் பாக்யராஜ், ஹீரோவுக்கு வழிகாட்டும் லிவிங்ஸ்டன், பிளாஷ்பேக்கில அம்மாவாக வரும் சோனியா அகர்வால், அவர் கணவராக, பணத்தாசை பிடித்தவராக வரும் அருவி மதனும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

இந்த பிரச்னைகளுக்கு மூலகாரணமாக அந்த தாத்தா நடிப்பு, கெட்அப், அவர் செய்யும் விஷயங்கள் பயமுறுத்துகின்றன. கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உயிர் இருக்கிறது. பிளாஷ்பேக், படத்தொடக்க காட்சிகள் பிரஷ். காதல், கடன், போலீஸ் வரும் காட்சிகள் டல். பல சீன்கள் ஸ்லோவாக நகர்வதும் மைனஸ். அந்த கெட்ட சக்தி பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். முதற்பாதியில் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம். சில குறைகள் இருந்தாலும் திரில்லர் பிரியர்களுக்கு டார்க்ஜெயண்ட் பிடிக்கும்.

இந்த படங்கள் தவிர வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா நடிப்பில் காசி பின்னணியில் உருவான சின்ன சின்ன ஆசை படமும் வந்துள்ளது. சில மனிதர்களின் சின்ன சின்ன ஆசையை சூழ்நிலையை இந்த கதை பேசுகிறது. தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த மெர்சல், ஜில்லா படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.