ஹாய், ஒன்ஸ்மோர் படங்கள் எப்படி இருக்கு?

இந்த வாரம் கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’, அர்ஜூன்தாஸ், அதிதி சங்கர் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘அமரம்’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மினி ரிவியூ இதோ.

ஹாய்

லவ் மேரேஜ்தான் செய்வேன் என அடம்பிடிக்கும் கவினும், திருமணமே வேண்டாம் என ஓடும் நயன்தாராவும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிறார்கள். நயன்தாராவை அவருக்குத் தெரியாமலேயே காதலிக்கிறார் கவின். ஒரு சூழ்நிலை காரணமாக, ‘நயன்தாரா என் காதலி, அவர் வயிற்றில் என் குழந்தை வளர்கிறது’ எனப் பொய் சொல்கிறார் கவின். சில சூழ்நிலைகள் காரணமாக நயன்தாராவும் அதை ஏற்றுக்கொள்கிறார். இனியும் தாமதிக்கக் கூடாது என நினைத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களும் உறவினர்களும் ஊரில் ஏற்பாடுகள் செய்கின்றனர். கர்ப்ப நாடகம் வெளியில் தெரிந்ததா? கவின் காதலை நயன்தாரா புரிந்துகொண்டாரா? கடைசியில் தமிழ்சினிமா வழக்கப்படி இருவருக்கும் திருமணம் நடந்ததா என்பது ‘ஹாய்’ படத்தின் கதை. விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார்.

ரொம்ப ஜாலியாக, கலர்ஃபுல் காதல் கதை, அதில் காமெடியும் கலந்து கொடுத்திருப்பது படத்தை கமர்ஷியல் ஆக்கியிருக்கிறது. கொங்கு தமிழ் பேசிக்கொண்டு, நண்பர்களைக் கலாய்த்துக்கொண்டு, நயன்தாராவை மறைமுகமாகக் காதலிக்கிற ரோலில் கவின் கவர்கிறார். இடைவேளைக்குப் பின் குடும்பம், உறவுகள், கர்ப்பத்தை மறைக்க ஐடியா என இன்னொரு நடிப்பைத் தருகிறார். கிளைமாக்ஸில் இயல்பான நடிப்பால் கவர்கிறார். பாடல்களும், காமெடியும் படத்துக்கும், அவருக்கும் செட்டாகியிருக்கிறது. கவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

ரொம்ப நாளைக்குப் பின் நயன்தாராவுக்கு நல்ல கேரக்டர். அழகாக இருக்கிறார்; நடிப்பும் கியூட். அவரின் அப்பா பாசக் காட்சிகள், கர்ப்பிணியாக நடித்து தவிப்பது, சென்னைக்கு வந்து மிரள்வது போன்ற காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும் கலர்ஃபுல்லாகத் தெரிகிறார். மேக்கப், காஸ்ட்யூம் அந்த கேரக்டருக்குக் கொஞ்சம் அந்நியமாகத் தெரிகிறது. கிராமத்து டச் அவரது நடிப்பிலும் குறைவு.

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் கவின் அப்பாவாக வருகிறார். அட, அவரது நடிப்பு, அவரது பேச்சு, அவரது ஸ்டைல் டயலாக் செம. சில காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார். அதேபோல், நயன்தாரா அப்பாவாக வரும் பிரபுவுக்கும் நல்லதொரு அழுத்தமான வேடம். தனது மனைவியைப் பிரிந்து அவர் தவிப்பது, குடிகாரனாக அவமானப்படுவது என மிரட்டியிருக்கிறார். ஹீரோ அம்மாவாக வருகிறார் ராதிகா. நண்பர்களாக வரும் கதிர், குரேஷி, உறவினராக வரும் சத்யன் நடிப்பும் கதைக்குப் பிளஸ் ஆகியிருக்கிறது. ஜென்மார்ட்டின் பாடல்கள், அவரது இசையில் அனிருத், துருவ், ஜி.வி.பிரகாஷ் பாடியிருப்பது இதம். குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெகு இயல்பாகவும், சிரிக்கும்படியும் இருப்பது குடும்ப ஆடியன்ஸையும் கவரும்.

குடும்பப் பிரச்னை, காதல், நண்பர்கள் என முதல் பாதி கழிகிறது. அதைவிட, கர்ப்பம், கலாட்டா, திருமண ஏற்பாடுகள் எனச் செல்லும் 2-ம் பாதி கதை விறுவிறுப்பாக இருக்கிறது. சில சென்டிமென்ட் காட்சிகள் படத்தைக் கலகலப்பாக்குகின்றன. வழக்கமான காதல் கதை என்றாலும், மூத்த நடிகர்களின் நடிப்பு, காதல், காமெடி, தொய்வில்லாத கதை ஆகியவை படத்தை ரசிக்க வைக்கின்றன.

ஒன்ஸ்மோர்

தனது கல்லூரி சீனியரான அர்ஜூன்தாஸை விரட்டி, விரட்டிக் காதலிக்கிறார் அதிதி சங்கர். அவரோ கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட காதல் தோல்வியால் நொந்துபோயிருக்கிறார். ஒரு கட்டத்தில் அதிதியின் காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்துக்குத் தயாராகிறார். பழசை மறக்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்போது, அர்ஜூன்தாஸுக்கு பழைய காதலி போன் செய்கிறார். மீண்டும் அவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. எந்தக் காதலை அர்ஜூன்தாஸ் ஏற்கிறார்? கடைசியில் யாரைத் திருமணம் செய்கிறார் என்பது ‘ஒன்ஸ்மோர்’ கதை. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார்.

அர்ஜூன்தாஸ் நடித்த பக்கா லவ் ஸ்டோரி. அவர் கரடு முரடான ஆளாச்சே, அவர் எப்படி இந்தக் கதையில் என யோசிக்கலாம். ஆனால், கேரக்டருக்குத் தக்கபடி அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வி, மன அழுத்தம், சிடுசிடு மூஞ்சி, கோபம் என முதற்பாதியில் வருகிறார். அவருக்கும் அதிதிக்குமான காட்சிகள் சிறப்பு. பிற்பாதியில் கேரள கல்லூரி, கல்ச்சுரல் டே, காதல், தவிப்பு என வேறு பரிணாமத்தில் வருகிறார். கிளைமாக்ஸில் இவரா? அவரா? எனத் தவித்து முடிவெடுக்கும் இடமும் சூப்பர். ஆனால், பல இடங்களில் அவரது நடிப்பு கதைக்குச் செட்டாகவில்லை. குறிப்பாக, இடைவேளைக்குப் பின் அந்தக் கல்லூரி மாணவர் வேடம், அந்தக் காதல் காட்சிகள் படத்துக்கு மைனஸ்.

துறுதுறுவென, கடகடவென பேசிக்கொண்டு செம எனர்ஜியாக நடித்திருக்கிறார் அதிதி. அவர் அர்ஜூன்தாஸைத் துரத்தும் காட்சிகள், எப்போதும் ஃப்ரெஷ்ஷாக, பாசிட்டிவாக இருக்கும் காட்சிகள் படத்தையும் எனர்ஜியாக்குகின்றன. காதல், பாடல், திருமணக் காட்சிகளில் அவரது நடிப்பும் பக்கா. இன்னொரு ஹீரோயினாக சோனா ஒலிக்கல் வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டல் ஆக இருக்கின்றன. பல காதல், பல எமோஷன் காட்சிகள் தனித்து நிற்கின்றன.

காதல், மோதல், பிரிவு, மீண்டும் காதல் என ஒரு மாறுபட்ட ஸ்கிரிப்ட்டில் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி கதை இழுஇழுவென இழுப்பதும், அந்தக் காதலில், பிரிவின் உயிர் இல்லாததும் படத்தைக் கொஞ்சம் பின்னோக்கி இருக்கிறது. படத்தின் முக்கியமான சிறப்பு, ‘ஹிருதயம்’ இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல்வஹாபின் மெலோடி, துள்ளல் பாடல்கள், பின்னணி இசை. அதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த ‘படபட கண்ணம்மா’ பாடல் சூப்பர் ஹிட். கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பல முறை பார்த்து ரசித்திருக்கலாம்.

அமரம்

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கூலிக்காக ஆயுதம் ஏந்திக் கொலை செய்கிறார்கள். பணத்துக்காகப் பல வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி பலரைக் கொல்ல வைக்கிறார் சாய்தீனா. ஹீரோயின் ஐரா அகர்வாலின் அப்பாவை அப்படிக் கொல்கிறார் ஹீரோ ராஜன் தேஜஸ்வர். தந்தை கொலைக்குக் காரணமாக ஹீரோவைப் பழிவாங்க, அவர் இருக்கும் இடத்துக்கே அடியாட்களுடன் வருகிறார் ஐரா. அவருக்கு எம்.எல்.ஏ. நாகிநீடு துணையாக இருக்கிறார். ஒருகட்டத்தில் அவரே ஐராவுக்கு எதிராகத் திரும்ப, ஹீரோயினைக் காப்பாற்றிப் பல உண்மைகளைச் சொல்கிறார் ஹீரோ. கடைசியில் நடப்பது என்ன என்பதைத் திருப்பங்கள், மலைவாழ் மக்கள் வாழ்வு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பின்னணி, தாதா, அடியாட்கள், துரோகம், வெள்ளந்தி மக்கள் எனப் பல அம்சங்களைக் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். கதைக்களம் புதுமையாக இருப்பதும், இயல்பான நடிப்பும், ஒளிப்பதிவும் படத்தின் பிளஸ்.

படம் முழுக்க அமைதியாக இருக்கிறார் ஹீரோ ராஜன் தேஜஸ்வர். அவரது ஆக்‌ஷன் காட்சிகள், அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மிரட்டல். வேறு வகைக் களம் என்பதால் காதல் இல்லை. ஹீரோயின் ஐராவின் அப்பா பாசம், அவரது கோபம், உண்மை தெரிந்து அவர் தவிப்பது ஓகே. பல படங்களில் காமெடியனாக நடித்த ஜார்ஜ் மரியானுக்கு இதில் அழுத்தமான வேடம். கல்கியும் நல்ல வித்தியாசமான நடிப்பு. மலைவாழ் மக்கள், மலை, அவர்களின் கஷ்டம், ஏமாற்றம் ஆகியவற்றை அழகாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி கொஞ்சம் டல் ஆகிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது. புதுமுகங்கள் நடித்திருப்பதும், ஆக்‌ஷனை மட்டுமே நம்பிப் படத்தை எடுத்திருப்பதும் மைனஸ்.

மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.