உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் விருப்பமான கொண்டாட்டமாக கருதப்படும் மெக்சிக்கன் வேவ்ஸ் பற்றி விரிவாகக் காணலாம்.
உலகத்தின் பிரம்மாண்டங்களைப் பற்றி யோசிக்கும் போது, கடல் அலையும் நனது பட்டியலில் இடம்பெறும். நமக்கு பிடித்த அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது அதே கடல் அலையின் ’வைப்’ ரசிகர்களுக்குள் ஊறினால், அதற்குப் பெயர்தான் மெக்சிக்கன் வேவ்ஸ்.
1986ல் மெக்சிக்கோவில் உலகக் கோப்பை நடைபெற்றது. அப்போது தங்களுடைய சொந்த நாட்டினரான மெக்சிக்கன்ஸ் களத்தில் இருந்தபோது அவர்களை உற்சாகப்படுத்த ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வேவ் தான் மெக்சிக்கன் வேவ்.
ரசிகர்களில் ஒரு குறிப்பிட்ட குழு, கைகளை உயர்த்தி ஒரே மாதிரியான அசைவை ஏற்படுத்த, அதை தொடர்ச்சியாக, பக்கத்தில் இருக்கும் குழுவும், அவர்கள் விட்ட இடத்தில் இருந்து லூப் மோடில் அடுத்தடுத்த குழுவினருக்கு கைமாற்றிவிடுவர்.
உதாரணமாக ஒரு வானவில் போன்று, கைகளை இடது புறத்திலிருந்து தலைக்கு மேல் ஒரு ஆஸ்தெடிக் மோஷனில் உயர்த்தும்போது, அதேபோல் ஒவ்வொருத்தரும் அதை செய்து வலது புறமாக கையை இறக்கும்போது, தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கடல் அலை எழும்புவது போன்று காட்சியளிக்கும். அதனால் தான் அதற்கு மெக்சிக்கன் வேவ்ஸ் என்று பெயர். காலப்போக்கில் இந்த கொண்டாட்டம், ஒரு காய்ச்சலாக மாறி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.
மெக்சிக்கோவினர், அவர்களது நாட்டுக்காக தொடங்கிய இந்த கொண்டாட்டம், இப்போது ஒவ்வொரு கால்பந்து போட்டியின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. இதை தொலைக்காட்சியில் பார்க்கும்போதும், நேரில் பார்க்கும்போதும், எதிர்முனையில் பார்க்கும்போதும், மிகவும் அற்புதமாக காட்சியளிக்கும். ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து இந்த அலையை லூப் மோடில் நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், இதனை முழு ஈடுபாட்டுடன் ஒற்றுமையாக செய்து மகிழ்கின்றனர். இன்றைய காலத்தில், உலகளவில் நடைபெறும் ஒவ்வொரு கால்பந்து போட்டியும் மெக்சிக்கன் வேவ்ஸ் இல்லாமல் நிறைவு பெறுவதே இல்லை.







