ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர் ரூபாய் 1.50 லட்சம் பணத்தை தவற விட்டு சென்ற நிலையில் நேர்மையாக காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார்
இன்ஸ்டியூட்டில் பிளம்பிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மாதத்தில் 10 நாட்கள் மட்டும் பயிற்சி நடைபெறுதால் அதற்கான கட்டணம் செலுத்துவதற்காக ரூபாய் 1,50,000 எடுத்துக்கொண்டு செல்வகுமார் அவரது மனைவி நித்யா பாண்டி, குழந்தைகள் என அனைவரும் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் (28.06.2022) காலை 11 மணியளவில் சென்னை திருவான்மியூரில் இருந்து
நீலாங்கரைக்கு ஷேர் ஆட்டோவில் வந்தனர். அப்பொழுது கபாலீஸ்வரர் நகர் சிக்னலில்
ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கி உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவகத்திற்கு சென்ற தம்பதிகள் தாங்கள் பணம் எடுத்து வந்த பையை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டதாக அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று மாலை 4:30 மணியவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் (32) பையில் இருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நித்யா பாண்டியிடம் பணம் என்னிடத்தில் தான் உள்ளது என்ற தகவலை கொடுத்து காவல் நிலையம் வரை வைத்து போலீசார் முன்னிலையில் பணத்தை பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு காவல்துறையினரும், பணத்தை பறிகொடுத்தவரும், பொதுமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.








