ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதை!

ஜி.எஸ்.டி உருவானது முதல் தற்போது வரை ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதையை குறித்து இந்த பதவில் விரிவாக பார்க்கலாம்.  சமூக நீதி காவலரான முன்னாள் பிரதமர்  ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்த…

ஜி.எஸ்.டி உருவானது முதல் தற்போது வரை ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதையை குறித்து இந்த பதவில் விரிவாக பார்க்கலாம். 

சமூக நீதி காவலரான முன்னாள் பிரதமர்  ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்த போது 1986-87 ஆம் ஆண்டுகளில், முதல் முறையாக மறைமுக வரி விதிப்பில் சீர் திருத்தங்களை கொண்டு வந்தார். ‘மோட் வாட்’வரியை அறிமுகப்படுத்தினார். இது பின்னாளில் வாட் வரியாகியது. இதை ஜி.எஸ்.டி.யின் முதல்படி என்றும் சொல்லலாம்.

1991-96 காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங் சேவை வரியை அறிமுகப்படுத்தினார். 2004 -05 ல் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாட் வரியை கொண்டு வந்தார். பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரியைப் பற்றி குறிப்பிட்டார்.

மதிப்பு கூட்டப்பட்ட வரியைப் (VAT) போல் ஜிஎஸ்டி யிலும் மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் குழு அமைக்க கருத்துரு உருவாக்கம் செய்யப்பட்டது. 2008-ல் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஜிஎஸ்டி ஏப்ரல் 1, 2010 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்மொழியப்பட்டது.

2010-ல் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி.யை முழு வீச்சில் அமல்படுத்த திட்டமிட்டார். ஆனால் அப்போது பிரதமர் மோடி ,குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். ஜிஎஸ்டி அமலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் பல மாநிலங்களின் கடும் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

2011-ல் பிரதமர் மன்மோகன்சிங், ஜி.எஸ்.டி. அமல்படுத்தவிடாமல் பா.ஜனதா முட்டுக்கட்டை போடுவதாக கூறினார். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜி.எஸ்.டி க்கு அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்தார்.

2012-13-ல் காங்கிரஸ் கூட்டணி அரசு ஜி.எஸ்.டி.க்கு முழு வடிவம் கொடுத்தது. இதில் பெட்ரோலிய பொருட்களையும் சேர்க்க முடிவு செய்த போது மாநில நிதி அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

2014-ல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜி.எஸ்.டி.யில் பல்வேறு மாற்றங்கள் செய்தார். மாநிலங்களின் சிறப்பு அதிகாரம், சமரச தீர்வு மையம் ஆகிய பிரிவுகளை நீக்கி திருத்தம் செய்து மாற்றி அமைத்தார்.

பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம், சில உணவுப் பொருட்கள் மீது மாநில அரசுகள் வரியை குறைக்கலாம் போன்ற பிரிவுகள் 2014 ம் ஆண்டு நீக்கப்பட்டது. 2015-ல் மக்களவையில் ஜி.எஸ்.டி. நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேறாததால் நிலுவையில் இருந்தது.

நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் செப்டம்பர் 2016 இல் அமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் நிறைவேறியது . 1.7.2017 முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. 5%, 12%,18% மற்றும் 28% என நான்கு பிரிவுகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

30.6.2022 இன்றுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட்டது. நாளை 1.7.2022 முதல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாயில் பகிர்ந்தளிக்கப்படாது என்பது குறிப்பிடதக்கது.

ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1,67,540 கோடியாகவும், மே மாதம் ரூ.1,40,885 கோடியாகவும் இருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.