மாபெரும் துயரத்தை சந்தித்த ஹிரோஷிமா

அணுவெடிப்பின் பேரழிவை உலகுக்கு உணர்த்திய ஹிரோஷிமா நகரம் அணுகுண்டால் தாக்கப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள் ஆகின்றன. அணு ஆயுதங்களின் பேராபத்தையும், பேரழிவையும் மனித குலத்துக்கு உணர்த்திய நாள் 1945 ஆகஸ்ட் 6. பூமியில் வீசப்பட்ட…

அணுவெடிப்பின் பேரழிவை உலகுக்கு உணர்த்திய ஹிரோஷிமா நகரம் அணுகுண்டால் தாக்கப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள் ஆகின்றன.

அணு ஆயுதங்களின் பேராபத்தையும், பேரழிவையும் மனித குலத்துக்கு உணர்த்திய நாள் 1945 ஆகஸ்ட் 6. பூமியில் வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஏற்படுத்திய பேரழிவை, 76 ஆண்டுகளாக சுமந்துக்கொண்டிருக்கிறது ஜப்பான்.

இரண்டாம் உலகப்போரை முடித்துவைத்த “little boy” அணுகுண்டு வெடித்த போது, அடுத்தசில நொடிகளிலேயே சுமார் ஒன்றரை லட்சம் உயிர்கள் துடிதுடிக்க உயிரிழந்தன.
ஆனால், ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா இப்படி ஒரு அணு ஆயுத தாக்குதலை நடத்தும் என யாரும் யோசித்திருக்கவில்லை.

அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளை தேடி தேடி தற்போது பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, அன்று, டினியன் தீவிலிருந்து பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் விமானம் மூலம் 4,400 கிலோ எடை கொண்டிருந்த அணுகுண்டை, ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசியபோது, பூமியை பிளந்து சூரியன் உதிப்பதை போல தீப்பிழம்பால் சூழப்பட்டது அந்த நகரம். கண் இமைக்க கூட நேரமில்லாமல் உயிர்கள் மடிந்து போன செய்தி அடுத்தநாள் உலகை சூழ்ந்த போது, உலகநாடுகளே ஒருகணம் அதிர்ந்து போனது.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே நாகசாகி மீது ‘fat man” என்ற மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஜப்பானில் அணுகுண்டு தாக்குதலால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அணு ஆயுத தாக்குதல் நடந்து 76 ஆண்டுகளானாலும், அது விட்டுச்சென்ற கதிர்வீச்சு பாதிப்பு, இன்றளவும் அம்மக்களை நிம்மதியாக வாழவிடவில்லை. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள் கூட, ஏதேனும் குறைபாடுகளுனே பிறக்கும் அவலமும், நோயுடன் பிறக்கும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

அணுகுண்டுகள் அழிவை காட்டிச்சென்றாலும், இன்றளவும் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. நாடுகளின் பெயரால் நடைபெறும் போர்களோ, அணு ஆயுத வியாபாரிகளின் லாபத்தை மட்டுமே குறிவைத்து நகர்த்தப்படுகின்றன. அணுகுண்டு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை பாடங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருக்கும் நமக்கு அது குறித்த புரிதல் பெரியளவில் இருக்க வாய்ப்பில்லை.

பாலஸ்தீன், சிரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் போரின் போது உயிரிழப்பவர்களின் வலி அணுவின் பாதிப்பு குறித்து உலகுக்கு உணர்த்தும்.

உலகில் மீண்டும் ஒர் அணுவெடிப்பு நிகழ்ந்தால், அதன் பாதிப்பை உணரவும், அணு ஆயுத விற்பனையால் கிடைக்கும் லாபத்தை ருசிக்கவும் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.