அசாம் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக்கொண்டார். இன்று பதவியேற்றுக்கொண்ட ஹிமந்தா பிஸ்வாசிற்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் மூன்று கட்டங்களாக நடந்தது. இதில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுவரை எல்லா தேர்தலிலும் அரசியல் கட்சிகள் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திக்கும். ஆனால் அசாமில் நடந்து முடிந்த தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படவில்லை. அங்குக் கடந்த முறையும் பாஜகதான் வென்றது. இதனால் ஏற்கனவே முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவாலா முதல்வராவாரா ? அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராவாரா ? என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரையும் பாஜக தலைமை அழைத்ததாகவும், அதில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா முதல்வராகப் பதவி வகிக்கத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து குவஹாட்டியில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் பதவியேற்றுக்கொண்டார். அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அசாம், புதுவையில் மட்டுமே பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.







