பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பல மாதங்களாக திறக்காமல் இருந்த சுங்கச்சாவடி நேற்று திடீரென திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வாகன ஓட்டிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலை இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதன்பின் அந்த வழியில் வந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் காரை வாகன ஓட்டிகள் வழிமறித்து அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதை கேட்டறிந்த அவர், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.








