உணவகங்கள், பேக்கரிகளில், உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது பேப்பர்களை பிரிக்க உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற சுற்று அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,“உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பேப்பர்களை பிரிக்கவும், கவர்களை திறக்கவும் உமிழ்நீர் உதவிக்காக பயன்படுத்துகிறார்கள். இதன்காரணமாக கொரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
இந்த மனுமீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா தொற்று பாதித்த ஒருவரால் நூறு பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
உணவுப்பொருட்களை பார்சல் செய்யும்போது உமிழ்நீர் அல்லது கவர்களை பிரிக்க வாயிலிருந்து காற்றை ஊதுவதால் அது உணவுப் பொருட்களில் பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
நல்ல யோசனையைத் தெரிவித்துள்ளதாக மனுதாரருக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்கள் பார்சல் செய்யும் போது பேப்பர்களை பிரிக்க உமிழ் நீரை பயன்படுத்தக் கூடாது, கவர்களை திறக்க ஊதக் கூடாது என ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







