கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எல்லோ அலெர்ட் விடப்பட்டது. இன்று வயநாடு மாவட்டம் தவிர எஞ்சிய 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருவதால் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல ஓடைகளும் நிரம்பி வழிகின்றன. பொன்முடி, கல்லாறு, மங்கயம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராஜி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
-ம.பவித்ரா








