கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி அணையின் 3 பிரதான மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ள காரணத்தால் அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மூன்றாவது நாளாக அணைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் திங்கள்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,129 கன அடியாக இருந்துள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7,428 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-ம.பவித்ரா








