அசாமில் இன்று காலை 7:15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டத்தாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக அசாம் முதல்வர் தனது ட்வீட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரின் நல்வாழ்வுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன் மற்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.


அசாம் மாநில அமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் நிலநடுக்க சேத புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். மேலும், அசாம் முதல்வரிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது என்று உறுதி அளித்துள்ளார்.







