தமிழ்நாட்டின் அநேக இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும், அவ்வப்போது பல பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை குளிர்விக்கவும் செய்கிறது. வெயிலை தணிக்க கோடை வாசஸ்தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்றும், நாளையும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். 3 முதல் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.