ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி உரையாற்றினார்.
உதயநிதி பேசும்போது, “இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்குள்ள ஒரே தகுதி என்று நான் கருதுவது அனிதாவின் அண்ணன் என்பதுதான். அனிதாவின் அண்ணனாகவே நான் பேசுகிறேன். அனிதாவின் மரணம் உயிரிழப்புயல்ல, கொலை. பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து செய்த கொலை அது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரையிலும் நீட் தேர்வு இங்கு வரவில்லை” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 7 கோடி தமிழ் மக்களின் உத்தரவை மதிக்க வேண்டியது தான் ஆளுநரின் கடமை, நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் 7 கோடி மக்களையும் அவமதிக்கிறார் ஆளுநர், இதர மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும்,ஒன்றிய அரசு நினைப்பதை, மாநிலங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆளுநர் ஒரு போஸ்ட்மேன் தான் எனவும், மசோதாவை அனுப்புவது தான் அவர் வேலை, முதலமைச்சரின் எச்சரிக்கைக்கு ஆளுநர் செவிமடுப்பார் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிட்ட உதயநிதி, “பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி ஒதுக்கும் போது, அவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கே உண்டு” என்றும் கூறினார்.







