குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில், மருத்துவ குழு விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் செலுத்தியபோது கை நிறம் மாறி கருப்பாக காணப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் ரத்த ஓட்டம் இல்லாமல் கை அழுகியது தெரிய வந்தது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழந்தையை நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவ துறையின் கவனக்குறைவால் குழந்தைக்கு பிரச்னை ஏற்பட்டதா என்பதை கண்டறிய 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டதாக கூறினார்.
விசாரணை அறிக்கைக்கு பிறகு, கவனக்குறைவு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை என்று பெற்றோர் கருதினால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எதிர்காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தையின் கை அகற்ற்பட்ட விவகாரத்தில் மருத்துவ குழு விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







