கல்வி தொலைக்காட்சியை பார்க்க மாணவர்களை வலியுறுத்தி தண்டோரா அடித்து விழிப்புணர்வை திருச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் ஏற்படுத்தி வருகிறார்.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. தற்போது நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் 2 ஆண்டுகளாகவே பள்ளிச் செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவ, கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்பி வருகிறது தமிழக அரசு. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்படைந்துள்ளது. இந்த நிலையில் தான், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா வாசித்து மாணவர்களை கல்வி தொலைக்காட்சி பார்க்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஆசிரியரின் இச்செயல் அப்பகுதி மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.







