விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்தக் கூடாது-காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர்…

விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால்
துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்
விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட
தங்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல்துறையினர்
துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில்
கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு
தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில்
இருப்பதாகவும் அதுகுறித்த விசாரணைக்காகவே அவர்களை அழைத்ததாகவும்
தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும்
விசாரணை அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும்
அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக
தெரிவித்துள்ள நீதிபதி, இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என
கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டு விதிகளை
வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு
ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சமமன் அனுப்ப வேண்டுமெனவும் அவ்வாறு
அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்
எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில்
குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது எனவும் உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.