ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இது சர்ச்சையாக மாறிய நிலையில், அவர் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமீன் வழங்கியது. இதனிடையே தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.









